சில நேரங்களில்
நம் வாழ்வில் வந்து சென்ற மனிதர்களை நினைத்து கொண்டால் அவர்கள்
நம் மனக்கண்ணில் வந்து விடுகிறார்கள் ..
அவர்கள் பூமியின் ஏதாவதொரு மூலையில் இருந்தாலும்
உருவமற்ற உருவமாய்
பேசி,சிரித்து நாம் என்னவெல்லாம் கற்பனையில் உணர்கிறோமோ
அவ்வாறெல்லாம் நம்முடன் இருக்கிறார்கள்.
மகிழ்ந்திருந்த தருணங்கள் நினைவில் மீண்டும் மகிழ்வைத் தருகிறது,
எவர்களுடன் மகிழ்ந்திருந்தோமோ அவர்கள் நம்முடன் இல்லாமலேயே....
ஒரு முறையே நடந்திருந்த நிகழ்வுகள் நினைவில் பல முறை நெகிழ்வைத் தருகிறது,
அந்நிகழ்வுகள் மீண்டும் நடக்காமலேயே.
நம்மால் அவர்களை உணர முடிகிறது, நினைவுகளால் தொடர முடிகிறது.
அச்சமயங்களில் நாம் மனதளவில் மகிழ்ச்சியாகவே உணர்கிறோம்.
நினைவுகளால் மலர்கிறோம்..
ஒருவேளை...
அதே நபர்கள் இறந்திருப்பின் அவர்களை நினைக்கும் போதெல்லாம் வருந்துகிறோம்.
மகிழ்ந்திருந்த தருணங்கள் நினைவில் வருத்தத்தைத் தருகிறது
எவர்களுடன் மகிழ்ந்திருந்தோமோ அவர்கள் நம்முடன் இல்லாமலேயே..
ஒரு முறையே நடந்திருந்த நிகழ்வுகள் பல முறை சோகத்தில் ஆழ்த்துகிறது..
அந்நிகழ்வுகள் மீண்டும் நடக்காமலேயே.
இரு வேறு நிலைகளிலும் நாம் யாரை நினைத்தோமோ அவர்கள் நம்முடன்
இருந்து நம்மை மகிழ்விக்கவும் இல்லை, நம்மை விட்டு சென்று துயரப்படுத்தவும் இல்லை.
உண்மையில் நம்மை மகிழ்வித்ததும், துயரப்படச் செய்ததும் அவர்களின் நினைவுகள் மட்டுமே..
நாமாகவே அவருடைய நினைவுகளுடன் மகிழ்வுடனும், வருத்ததுடனும் இருந்திருக்கிறோம்.
எனில் ஒருவர் இருந்தாலும்,
இறந்தாலும் அவரின் நினைவுகளைக் கொண்டு நாம் மகிழ்வுடன் வாழ முடியுமா?
நம்மை மகிழச் செய்வதும், துயரப் படச் செய்வதும்
ஒருவரின் நினைவுகள்தான் என்றால் இறந்தது யார்?
ஒருவர் நம்முடன் இல்லை,
ஆனால் இவ்வுலகில் இருக்கிறார் என்ற எண்ணம் மட்டுமே
ஏன் நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது?
இருந்த போதும், இறந்த பின்பும் நம்முடன் இல்லாதிருந்த ஒருவரின்
நினைவுகள் இருவேறு விதமாக செயல்பட எது காரணம்?
ஒருவரின் இருப்பும், இறப்பும் நம்மிடத்தில்
எவ்வித மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும்
அவரின் நினைவுகள் ஏன் இவ்வித உணர்வைத் தருகிறது?
இவ்வாறு சில கேள்விகளுடன் எனது நினைவுகள் தொடர்கிறது..
No comments:
Post a Comment