Topics

25 Jul 2011

பணம் தேவையா?

யாரேனும் தலைப்பை பார்த்ததும் ஆவலாய் இதற்குள் நுழைந்திருந்தால் அவர்கள்  என்மீது வருத்தம் கொள்ளக்கூடாது.
ஏனென்றால் நாம்  இங்கே பணம் பண்ணுவதெப்படி என்பது பற்றி விவாதிக்கப் போவதில்லை. ஆனால், இவ்வுலகில் "பணம்" என்ற ஒன்று  இல்லாத நிலை சாத்தியமா? பணம் என்பது  இல்லாமல் உலகம் எவ்வாறு இயங்கும்?
குறைந்தபட்சம்  அது போன்ற  ஒரு சமுதாயத்தை கற்பனை செய்தாவது பார்த்திருக்கிறோமா? என்பதுதான் இதில் இடம் பெற்றிருக்கும் விஷயங்கள்..
பல பெரியோர்களின் நூல்களைப் படித்ததினின்று எனக்குள் தோன்றிய எண்ணங்களைப் பற்றி பல சமயங்களில், பல நபர்களிடம் விவாதித்திருக்கிறேன். பலர் பொருந்தாத சிந்தனை என்றும், சிலர் என் கருத்தை சிலாகித்தும்,ஒரு சிலரோ நான் சொல்வது என்னவென்றே புரியாமல் ஒப்புக்கு தலையாட்டியும் வைத்தனர்.. ஆனால் இப்போது எவ்வித இடையூறும் இன்றி எனது "நினைவுகளை" உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்..

பணத்தின்
பயணம் துவங்கியது...

பணம் என்றால் என்ன?  பணம் என்பதன் நோக்கம் என்ன? என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருந்தாலும் மறுபடியும் ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்வோம். நமக்கு தேவையான ஏதேனும் ஒரு பொருளை பெறுவதற்காக நாம் கொடுக்கும் "விலை"தான் பணம்.
அதாவது நம் "தேவை"யை நிறைவு செய்துகொள்ள நாம் கொடுக்கும் ஏதோ ஒன்றிற்கு பெயர்தான் பணம். "தேவை" என்பதில் எல்லாமும் அடக்கம் என்பதை நான் கூற வேண்டியதில்லை என நினைக்கிறேன்..பணம் என்றால் அது காகிதமாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை.
ஒன்றை பெறுவதற்காக ஒன்றை கொடுக்கிறோம் என்றால் அதுதான் விலை.

மனிதன் தன் உழைப்பை மட்டுமே தந்து தனது தேவைகளை பெற்ற காலமும் உண்டு.ஜமீன்தாரி முறையிலும், ஆண்டான் அடிமை காலத்திலும் பணம்  என்ற ஒன்றை உழைத்தவர்கள் பெற்றதில்லை..உழைப்பை தந்து தேவைக்கும் குறைவானதை மட்டுமே பெற்றனர்..

மற்றொரு காலகட்டத்தில் நம்மிடமுள்ள ஏதேனும் ஒரு பொருளை கொடுத்து நம் தேவையை பெற்றுக் கொண்டிருந்தோம்.
இதனை "பண்டமாற்று முறை"யென நாம் பள்ளியில் வரலாற்றில் படித்திருப்போம்..
எப்போதுமே எதையாவது தலையில் தூக்கி கொண்டே திரிய முடியுமா என்ன? ஆகவே சுலபமாக தனக்குத் தேவையானதை பெற வேண்டும்,
அதற்கு எதையாவது பதிலுக்கு தந்தாக வேண்டும். என்ன செய்யலாம்?  இங்குதான்  நமது மனித சமுதாயம் மிக மிக முக்கியமான நிலையை அடைகிறது.. நமது  "வியாபாரப் பெருமக்கள் " உருவான காலகட்டம் இதுதான்.. அதாவது ஒரு பொருளை மொத்தமாக ஓரிடத்தில் வாங்கி
மற்றொரு இடத்தில் அதனை கொடுப்பது. அதற்கு அவர்கள் கையாள வசதியாக ஒரு ஊடகத்தை (medium) உருவாக்க வேண்டிய
அவசியம் வந்தபோது பணம் தனது முக்தி(முற்றிய) நிலையை அடைகிறது... தனக்கான ஒரு அடையாளத்தை பெறுகிறது... வியாபார உலகமும் பல்வேறு வளர்ச்சிகளை எட்டியது.. பணம் என்றால் அது காகிதமாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை.தாமிரம், வெள்ளி, ஈயம்,தங்கம் என பல உலோக நிலையிலும் பின்பு தோல், காகிதம் எனவும் இன்றைய நிலையை அடைந்திருக்கிறது பணம்..

எவன்டா இவன் "பணம் தன் வரலாறு கூறுதல்" எகதையளக்கிறான் என்று தோணுகிறதா? காரணம் இருக்கிறது..

கற்பனையல்ல... நிஜம்...

பூமியின் மிக நீண்ட நெடிய பாதையில் நாம் பார்த்தது ஒரு சில அடிகள்தான்..பணம் உருவான காலத்தைதான் கூறுகிறேன்.. ( பூமியின் வயது ஏறத்தாழ பல லட்சம் ஆண்டுகள் ) அதற்கு முன்பும் மனித இனம் வாழ்ந்துதானே இருந்தது? பணம் இல்லாமல் எப்படி இருந்திருப்பார்கள்?அன்று இப்போதிருப்பது போல கோடிக்கணக்கில் மனிதர்கள் இல்லைதான்.. இந்த சமுதாய அமைப்பும் அன்று இல்லைதான். ஆனால் சமுதாயம் என்ற நிலையை அடைவதற்கு முன்பு குழுக்களாக வாழ்ந்த மனிதன் எந்த பணத்தை வைத்திருந்தான்? ஆனாலும் அவர்களின் தேவைக்காக அவர்கள் பாடுபடாமல் இருந்திருக்க முடியாதல்லவா? இன்னும் சொல்லப்போனால் அதனை குழுக்கள் என்று நாம் அழைத்தாலும் அது மிகப்பெரியதொரு குடும்பமாகவே காணப்பட்டது.. தங்கள் தேவைகளை தாங்களாகவே நிறைவு செய்து கொண்டும், குழந்தைகளையும், முதியவர்களையும் முறையாக பராமரித்தும்,
மற்ற குழுக்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொண்டும், என மொத்தத்தில் எல்லோரும் எல்லோருக்காகவும் பாடுபட்டிருந்திருந்தார்கள்.
குழுக்களை வழி நடத்திய புண்ணியவான்கள் ஒரு கட்டத்தில் குழுக்களின் தலைவர்களாகவும், பின்பு  அரசர்களாகவும் அரிதாரம் பூசிக்கொண்ட காலமும் அதுதான்.. ஆனால் இன்றிருப்பதுபோல் தகுதியற்ற, ஆனால் பணம் மட்டுமே இருப்பதால் தலைவனாக ஆகும் நிலை நிச்சயமாய் இருந்திருக்காது.. ஏனெனில் அன்று  "திறமை" என்ற ஒன்றுதான் தலைவனாக  இருக்க முக்கியமான தகுதியாக இருந்தது. நாம் முதலில் ஒரு விசயத்தைப் பார்த்தோமல்லவா? அதாங்க "பணம் தன் வரலாறு" கூறுதல்.
அந்த வரலாறு இந்த நிலையிலிருந்துதான் தொடர்கிறது..
இரண்டையும் வரிசைப்படுத்திகோங்கனு நா சொல்லனுமா என்ன?அடுத்தத பாப்போம்..

ஆகா!! இவன் இப்போதைக்கு முடிக்கமாட்டான் போலன்னு நினைக்கிறது புரியுது.. பணம் என்பது என்ன சாதாரண விசயமாங்க எடுத்தோம், கவுத்தோம்னு முடிக்க?
பொறுமையா போவோம்... சரியா?


பணம் தேவையா?

ஏன் பணம் என்ற ஒன்றை நாம் மறுத்து பேசவேண்டும்? இவனிடம் கோடி கோடியாய், அவ்வளவு ஏன் சில லட்சங்களாவது இருந்தால்
இப்படி இவன் யோசித்திருக்கவே மாட்டான் என யாரேனும் நினைப்பீர்களேயானால் அவர்களுக்கு, "பணம் என்ற ஒன்று தேவையா"
என்ற கேள்வியை எழுப்ப காரணம் என்ன? என்பதற்கான காரணத்தைக் கூற கடமைப்பட்டிருக்கிறேன்..
ஏனெனில் பணம் என்ற ஒன்று இருப்பதுதான் மனித சமுதாயத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும், ( இப்போதெல்லாம் பறவைகள், விலங்குகள் மற்றும் எல்லா ஜீவராசிகளுக்கும் ) விழையும் எல்லா தீங்குகளுக்கும் மூலகாரணமெனக்  கருதுவதால்தான் இப்படி ஒரு கருத்தை முன் வைத்து எனது எழுத்தை தொடர்கிறேன்.  பணம் என்ற ஒரு medium இல்லைனா எப்டியா நாம நமக்கு தேவையானதா வாங்க முடியும்? பணம் இல்லாட்டிதானயா பிரச்சினை. இருந்தா என்னயா பிரச்சினை? ன்னு நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.. வாங்க அதையும் ஒரு எட்டுபோய் பாப்போம்...

உலக நாடுகளிடையே போர் என்பதில் துவங்கி உள்ளூர் குழாயில் தண்ணீர் வராதவரை எல்லா பிரச்சினைகளுமே பணம் என்பதினால்தான் வருகிறது என்பதே எனது வாதம்.. நாடுகளுக்கு இடையே போர் அல்லது சண்டை வருவதன் அடிப்படை காரணம் என்ன?  நீயா? நானா? யார் பெரியவன் என்ற பலப்பரிட்சையா? இல்லவே இல்லை..எல்லாம் பணம் மற்றும் பணம் சம்பந்தமான இயற்கை வளங்களுக்காகத்தான் பெரும்பாலான நாடுகளுக்கு இடையே போர் அல்லது சண்டைவருகிறது..
குறிப்பாக இன்றைய தலைமுறை சந்தித்துக்கொண்டு இருக்கும் பிரச்சனைகளில் மிக முக்கியமானவை " புவி வெப்பமயமாதல்", அடுத்ததாக "இயற்கை வளங்களின் பற்றாக்குறை".. காரணம் அசுர வேகத்தில் சூறையாடப்படும் இயற்கை வளங்கள். இவற்றிற்கும் பணத்திற்கும் சம்பந்தம் இருக்கானு யோசிக்காதீங்க..நிச்சயமா இருக்கு..
தனது குழந்தைகள், "தேவைக்காக" எடுப்பதற்கு பூமித்தாய் எப்போதும் "பஞ்சப்பாட்டு" பாடமாட்டாள்..

பொருளாதாரம் பற்றி கொஞ்சம்...

பணம் = இலாபம் = அணுகுண்டு

பணம் பற்றி பேசும் போது ஏன் பொருளாதாரம் பற்றி பேசவேண்டும்? ஏனெனில் பொருளாதரத்தில் முன்னேறிய நாடுகளை பட்டியலிடும் போது  தேசிய வருமானம், தனி நபர் வருமானம் என எளிய மனிதர்களுக்கு புரியாத விசயங்களே முக்கிய அளவிடும் கருவியாக கருதப்படுகிறது..
இருந்தாலும் பொருளாதாரத்தில் இரண்டு முக்கியமான விஷயங்கள் அடிப்படையாக இருந்துவருகிறது.. அவை "தேவையும்", "அளிப்பும்"..
(அதாவது Demand & Supply) இவை ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் "அன்றில் பறவைகள்". எந்த சூழ்நிலையிலும் ஒன்று இல்லாமல் மற்றொன்றால்  இருக்கவே முடியாது.. அதாவது நம் தேவைக்கான அளவு உற்பத்தி இருக்க வேண்டும். இல்லையெனில் சமநிலை இல்லாமல் போய் நாட்டில் பல்வேறு சிக்கல்கள் வந்து விடும். ஒருவேளை உற்பத்தியின் அளவு தேவையை விட உயர்ந்து விட்டால்? வேறென்ன விலை வீழ்ச்சிதான்.. டக்குனு புரியுற மாதிரி சொல்லனும்னா  நாம் அவ்வபோது கேள்விப்படும் தக்காளி, கத்தரி போன்ற காய்கறிகள் குப்பைக்கும், மாட்டுத்தீவனமாகவும் போவதை சொல்லலாம்.. தேவை உயராமலோ, அல்லது தேவை குறைவதனாலோ பொருளின் விலை வீழ்ச்சியடையும். பொருட்கள் தேங்கும்.. இன்னும் விலை வீழும்..அதனைத் தொடர்ந்து பொருளாதாரமும் வீழும்..வேலை இல்லா திண்டாட்டம் பெருகும். "மந்த நிலைப்பொருளாதாரம்"  என்ற "தேசிய நோய்" தோன்றும். அதனைச் சரி செய்ய,  அரசு பொருளியல் வல்லுனர்களைக் கொண்டு பணக் கொள்கையின் மூலமாகவும், புதிய வரி விதிப்பின் மூலமாகவும் நோயைக் கட்டுப்படுத்த முயலும்.. மீண்டும் விலை உயரும். விலையேற்றம் மக்கள் தலையில்தான் ஏற்றப்படும். ஆனால் "குவித்து" வைக்கும் உற்பத்தி முறையை மாற்றாமல் நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது போய் ஒரு கட்டத்தில் தேசமே இறந்து போகும்.. ஆகவே ஒரு நாட்டின் பொருளாதார நிலைத்ததன்மைக்கு (stablity) தேவையான  அளவு  உற்பத்தியும், உற்பத்திக்கு அளவான நுகர்வும் சம நிலையில் இருக்க வேண்டியது அவசியம்..  

அதென்னவோ எப்போதுமே விலை வீழ்ச்சி என்பது விவசாயப் பொருட்களை அல்லது விவசாயிகளால் நேரடியாக மக்களிடம் போய் சேரும் பொருட்களை மட்டுமே பெரும்பாலும் பாதிக்கிறது.. எப்போதாவது பெட்ரோல், தங்கம், அல்லது விவசாயம் சாராத பொருட்கள் இவ்வாறு விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளதா? நாம் பயன்படுத்தும் சோப்பு, பற்பசை, பவுடர், வாசனைத் திரவியம் போன்ற பொருட்கள் எப்போதாவது விலை குறைந்து உள்ளதா? அட இவ்வளவு ஏன். குடி தண்ணீராவது விலை குறைந்துள்ளதா? எனக்குத் தெரிந்து இல்லை. உங்களுக்குத் தெரிந்தும் இருக்காது.. இனியும் அப்படி எதுவும் நடக்காது. ஏனெனில் நமக்கு இவற்றின் உற்பத்தி செலவு எவ்வளவு என்பதும் தெரியாது. அதன் உண்மையான மதிப்பும் தெரியாது.. தயாரித்த நிறுவனத்தால் உறையின் மீது அச்சடிக்கப்பட்ட விலையை கொடுத்துவிட்டு போய்க் கொண்டிருப்போம் ஊமையைப் போல். ஏதோ சொல்ல வந்து வேறெதுவோ சொல்லிட்டு இருக்கேன்ல? ( இதே மேற்கத்திய நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியின் போது  ஒரு துண்டு ரொட்டிக்காக மூட்டை, மூட்டையாய் பணத்தை கொட்டிய சம்பவங்கள் வரலாற்றில் உண்டு.)

சரி விஷயத்துக்கு வருவோம்... அசுர வேகத்தில் இயற்கை வளங்கள் கபளீகரம் செய்யப்பட காரணம் எது? என்று ஒரு நோட்டம்..
இப்போது சந்தையில் உள்ள நுகர்வுப்பொருட்களின் பிரிவுகள் எண்ணிலடங்காதவை.. அதில் நாம் "அழகான" விஷயத்தை மட்டும் முதலில் பார்ப்போம்  அழகு சம்பந்தமான பிரிவை மட்டும் எடுத்துக்கொள்வோம். அழகு சாதனப் பொருட்களுக்கான சந்தையில் உள்நாடு, வெளிநாடு என எத்தனை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன? எத்தனை விதமான அழகு சாதனப் பொருட்கள் உள்ளன? எனச் சரியான தகவலை சொல்பவர்களுக்கு எத்தனை பரிசும் தரலாம்..அவ்வளவு  நிறுவனங்களும், அவற்றின் எண்ணிலடங்காத தயாரிப்புகளும் மலை போல குவிந்துள்ளது..எதனை வாங்குவது..? எதனை விடுப்பது..? எனத் தெரியாமல் குழம்பும் அளவிற்கு அவற்றிற்கான விளம்பரங்கள் வேறு நம்மை கிறுகிறுக்கச் செய்கின்றன. அவ்விளம்பரச் செலவும் அப்பொருளின் விலையில் சேர்ந்து நம் தலையில்தான் ஏற்றப்படுகிறது.  விளம்பரங்கள் வன்முறையா? இது ஒரு விவாதத்திற்குரிய விஷயம் ... அதை வேறொரு சமயம் பேசலாம்.. தேவை எவ்வளவு? என்பதை அறிந்து உற்பத்தி செய்த காலம் போய் (இதில் அவசர கால தேவைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்) கட்டுக்குள் அடங்காத உற்பத்தியும், பல "தேவையற்ற பொருட்களை"யும்  உற்பத்தி செய்துவிட்டு அவற்றை எவ்விதத்திலேனும், என்ன செய்தாகிலும் விற்றுத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிறுவனங்கள் ஆடும் தகிடுதத்தங்கள், விற்பதற்காக அவற்றின் ஊழியர்கள் படும் திண்டாட்டங்கள், காலாவதியாகும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள  பொருட்கள், பயன்படுத்திய பின்னர் நாம் குப்பையாய் விட்டெரியும் அதன் கழிவுகளில் அழியாவரம் பெற்று, ஆனால் இயற்கையை சீரழிக்கும் கழிவுகள் மலையென குவிந்து வருகிறது.. இவ்வாறு அழகான விஷயத்தின் அசிங்கங்களையும், அவலங்களையும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...

மேலே நாம் ஒரு புதிய வார்த்தையை பார்த்தோம். "தேவையற்ற பொருட்கள்" என்ற வார்த்தை.. அது இப்போது நமக்கு மிகவும் தேவையான வார்த்தை. எவற்றின் உற்பத்தி கடைநிலையிலுள்ள, ஒரு வேலை உணவுக்கும் வழியற்ற ஏழைகளின் துயர் தீர்க்க உதவவில்லையோ அவற்றை எல்லாமே தேவையற்றவையாக கருதலாம்.. உலகில் வயிற்றிற்கு ஒருவேளை உணவுகூட இல்லாமல் வாழும் ஏழை மக்கள் ஏராளமாய் இருக்கும் போது உணவுப் பொருட்களை பயிரிடாமல் புகையிலையை பயிரிட்டு பீடி, சிகரெட் உற்பத்தி செய்வதும்கூட தவறுதான்.. ஏனெனில் அவை உற்பத்தி செய்யப்படுவது அத்தியாவசியத் தேவைக்காக அல்ல, இலாப நோக்கில்தான் என்பது கூறாமலேயே தெரியும். ( எவ்வளவுதான் உற்பத்தி செய்தாலும் அதை வாங்க மக்களுக்கு பணம் தேவையே? அதுதானே பிரச்சினை..) இதைப்போல எண்ணற்ற, தேவையற்ற உற்பத்திகளைக் கூற முடியும்.. இதனையே நாம் தனியொரு மனிதனின் வாழ்வில் ஒப்பிட்டு பார்த்தால் நமது லட்சணம் புரியும்..

தனது குழந்தைகளும், குடும்பத்தாரும் வறுமையில் உழலும் போது, நாளெல்லாம் பாடுபட்டு உண்டாக்கிய பணத்தை மதுவிற்கு செலவு செய்தானாம் ஒருத்தன். அவ்வாறுள்ள ஒருவனை நம்மைப் போன்ற நல்லவர்கள் என்னவென்று அழைப்போம்? எப்படி ஒரு "பொறுப்பற்ற","ஊதாரித்தனமான" மனிதன் அவன் என்று அழைப்போம் இல்லையா? ஆனால் இந்த பூமி என்ற குடும்பத்தில் நாம் அனைவரும் அங்கத்தினர்களே என்று உணர்ந்தால், அவனுக்கும் நமக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்று உணர்வோம். முதலில் உலகின் மனிதகுலம் முழுவதும் தன்னிறைவு (உணவு, உடை, உறைவிடம்) பெறும் வரை இவற்றை ஒதுக்கி வைப்பதால் மனிதகுலத்திற்கு பெரிதாக இழப்பு ஒன்றும் நேர்ந்து விடாது.. 

தவறு நம்முடையதுதான்..
        
"உலகின் எந்த மூளையில் நடக்கும் பொருளாதார ரீதியிலான சண்டைகளுக்கும், இயற்கை வளங்களின் சுரண்டலுக்கும், அதன் தொடர்ச்சியான இயற்கை சீற்றங்களுக்கும் உலகின் அனைத்து மக்களுக்கும் தொடர்பு  இருக்கிறது என்பதை உங்களில் எத்தனை பேர் ஒப்புக்கொள்வீர்கள்? சதாம் உசேனின் மரணத்திற்கும், ஈரோட்டின் நொய்யலாறு வற்றி போனதற்கும் நமக்கும் சம்பந்தம் இருக்கிறது.. ஆம் நாமும் அந்தப் பாவத்தில் பங்கெடுக்கத்தான் வேண்டும்..ஏனென்றால் பெட்ரோல், டீசல் போன்றவற்றை பயன்படுத்தும் மக்களாகிய நாம்தான் "போட்டி வியாபாரம்" நடத்தும் மனிதர்களை உருவாக்கினோம்.. அதன் முடிவு இருவரில் ஒருவரது வீழ்ச்சி..உலகில் மட்டுமல்ல, வாணிப உலகிலும்கூட வலிமையற்றவன் அழிக்கப்படுவான்..வண்ண, வண்ண ஆடைகளை பயன்படுத்தும் நாம் ஏதோ ஒருவகையிலல்ல நேரடியாகவே அதை உற்பத்தி செய்பவரை கட்டாயமாகச் செய்ய வைத்தோம்.. இப்போது சாயக்கழிவு ஆற்றுப்படுகைகளை வற்றச் செய்துவிட்டதற்கு அத்தொழிலைச் செய்தவர்களை மட்டுமே குற்றம் சாட்டுவது சரிதானா? அவர்களெல்லாம் வெறும் அம்பு மட்டுமே..எய்தவர்கள் நாம்தானே. இவை வெறும் சில உதாரணங்கள்தான். நாம் தினம் தினம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின் பின்னாலும் இதைப் போன்ற ஒரு பயங்கரம் நடந்துகொண்டிருக்க  நாமே காரணிகளாக இருக்கிறோம் என்பதை மனசாட்சியுள்ள எவரும் மறுக்க இயலாது..

இப்படி தவறை நம் பக்கம் வைத்துக் கொண்டு உற்பத்தி செய்யும் நிறுவனங்களை மட்டும் குறை கூறுவது நியாமல்ல. இலாபநோக்கில்லாமல் தொழில் நடத்த அவை என்ன தொண்டு நிறுவனங்களா? ( சில சமயங்களில் தொண்டு நிறுவனங்கள் கூட இலாப நோக்கில்லாமல் செயல்படுவதே இல்லை)  சமுதாயத்தை பற்றியோ, இயற்கையின் பாதிப்பைப் பற்றியோ சிந்திக்க அவர்களுக்கு நேரம் ஏது? மேலும் அவர்கள் எத்தனையோ பிரச்சினைகளையும் மீறி இலாபத்தை அடைய வேண்டும்.. பாவம்.!!! அவர்களின் பாடு நமக்கெங்கே தெரியும்..

மேலே நாம் பார்த்தது வியாபார உலகின் அழகான ஒரு பிரிவை மட்டும்தானே.. இதைப் போல உணவு,மருத்துவம்,குளிர்பானம்,வீட்டு உபயோகம்,
வாகனங்கள், மின்னணு சாதனங்கள் என "தேவைக்கும் அதிகமான" ஒரு நீண்ட பட்டியலே போடலாம். நாமே அவ்வாறு இருக்கக் கூடாதென்பதால் பட்டியலை போட வேண்டாம். எளிதாக புரிய வேண்டுமெனில், 10 பேருக்கு 100 இட்லி போதும் என்றால் இங்கே 1000 இட்லிகள் தயாரிக்கப்பட்டு கட்டாயமாக திணிக்கப்படுகின்றது. மீதமானவை பயனின்றி குப்பைக்கு போகிறது.. குப்பைக்கு போவதற்கும் சேர்த்து  நம்மிடம் வசூலிக்கப்பட்டுவிடுகிறது..ஆனால் தற்போது உலகம் போகிற போக்கை பார்த்தால் 10  பேரும் அவரவர் கணக்கிற்கு 100 இட்லி சாப்பிடப் பழகி விடுவோம் போலத் தெரிகிறது..

இப்படியாக, ஒருபுறம் தங்களின் இலாபத்தை பெருக்கிக்கொள்வதற்காக நிறுவனங்கள் தொடர்ச்சியாக உற்பத்தியை பெருக்கி, குவித்துக் கொண்டும்,
மக்களாகிய நாமும் சற்றும் சளைக்காமல் நமது தேவைகளை அதிகரித்துக் கொண்டும் இருக்கிறோம்.. மறுபுறம்  இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நாடுகளின் பிரநிதிகளை கூட்டி ரம்மியமானதொரு இடத்தில் மாநாடுகளை நடத்தி தங்களது கடமையை முடித்து, சமுதாயத் தொண்டு ஆற்றி வருகின்றனர் உலகத் தலைவர்கள்.. இது எப்படி இருக்கிறதென்றால் நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு கிளையின் அடியை வெட்டுவது போலத்தான்...இதிலிருந்து நாம் அறிய வேண்டியது இயற்கை வளங்கள் தேவைக்கு அதிகமாக நுகரப்பட்டும், வீணாக்கப்பட்டும் வருவதற்கு நிறுவனங்களின் இலாபம் என்ற அதாவது பணம் என்ற ஒன்றுதான் காரணம் என்பதுதான். அசுர வேகத்தில் இயற்கை வளங்கள் கபளீகரம் செய்துகொண்டிருக்கப்பட காரணம் என்ன? சேவைகளாக கருதப்பட்ட கல்வி, மருத்துவம் போன்ற பல துறைகளும் "வியாபாரமாகி" மக்களுக்கு பாரமாகிப் போனது எதனால்? அறிவை வளர்க்கவே கல்வி, நம்மை விற்க அல்லவே? ஆனால் கல்வி நிறுவனங்கள் பெரும் நிறுவனங்களுக்கான அடிமைகளை தயாரித்து அனுப்பும்  "தொழிற்கூடங்களாக" மாறிப் போனதேன்? திரைத்துறை, கலை, விளையாட்டு போன்றவை பணத்தால் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தவரை அதற்கான மதிப்பை இழக்காமல்தானே இருந்தது?  பொறியியலும், விஞ்ஞானமும், மருத்துவமும்  படித்த அறிவாளிகள் கூட போட்டி வியாபார வலையில் சிக்கி ,போர்க்கருவிகள் செய்யும் கேடான காரியங்களுக்கும், உலகின் அழிவிற்கும் தங்களது அறிவை பயன்படுத்துவது ஏன்? நாட்டின் மிக உயர்வானதாக கருதப்படும் ராணுவத்திலும் ஊழல் ஏன்?  நிலம், நீர், காற்று போதாததற்கு இப்போது வான் வீதியும் கூட மாசுபட்டு போனதே அதற்கு யார் காரணம்? உலகிலுள்ள பணம் அனைத்தையும் வைத்து நம் அனைவருக்குமான இன்னொரு பூமியை நம்மால் உருவாக்கிடத்தான் முடியுமா? சர்வநிச்சயமாக முடியாது.. இவையெல்லாம் தெரிந்தும் அசட்டையாய் இருப்பதை "முட்டாள்தனம்" என்றல்லாது வேறு என்னவென்று சொல்வது...

இன்னொரு நுட்பமான, ஆனால் சாதாரண மக்களின் அறிவுக்கு எட்டாத விஷயம் ஒன்றும் இதில் இருக்கிறது..ஆயிரக்கணக்கான மனிதர்களை ஒன்று திரட்டி தொழிலைச் செய்பவர்கள் பெறுவது அதிகப்படியான செல்வத்தை மட்டுமல்ல..அதிகப்படியான அதிகாரத்தையும்தான்.. தனிமனிதர்கள் தங்கள் செல்வாக்காலும், அதிகாரத்தாலும் பொருளாதாரத்தில், சமுதாயத்தில், அரசியலில், ஆன்மீகத்தில் சிறப்பான இடத்தை பெற்று விடுகிறார்கள். இவர்கள் பொது சமுதாயத்திற்கு தீங்கான பல காரியங்களை செய்து விடக்கூடும்.. மேலும் தனி மனிதனிடம் அதிகாரம் குவிவது செல்வம் குவிவதைவிட ஆபத்தானதாகும்.  உதாரணத்திற்கு "போபால் விசவாயு" நமக்கெல்லாம் தெரிந்த சம்பவம்தான்..அதில் பண பலமும், அதிகாரமும் எப்படியெல்லாம் நாடகமாடியது என்பது நாடறிந்த ஒன்று...இன்றுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. இதைப் போன்ற சம்பவங்களால் எப்போதும் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்கள்தான் .. பல பொதுத்துறை  நிறுவனங்கள் இவ்வதிகாரம் படைத்தவர்களின் கைக்கூலிகளாக மாறி, சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய நலன்களை சிலரின் நலனுக்காக தாரை வார்ப்பதும் ( ஸ்பெக்ட்ரம்) மற்றொரு விளைவு.  


சட்டம் அரசாங்கத்தால் உருவாக்கப் படுகிறது.. ஆனால் அரசாங்கம்?
"மக்களின் சுயமரியதைக்காகத்தான், மக்கள் மானத்தோடு வாழ்வதற்காகத்தான் அரசாங்கமும், தேசியமும் வேண்டுமேயொழிய,           மற்றபடி  இவை  கேவலம் வயிறு வளர்க்க மாத்திரம் வேண்டியது என்றால் அதற்காக எந்த அரசாங்கமும்,  தேசியமும்                                                  கண்டிப்பாய்  வேண்டியதில்லை என்றே சொல்லலாம்.."

எல்லா நாடுகளும் தத்தமது சட்டங்களையும், கொள்கைகளையும், திட்டங்களையும் மக்களின் பிரநிதிகளைக் கொண்ட அவையில் தீர்மானம் இயற்றியே உருவாக்கினாலும் அச்சட்டங்களை பணம் படைத்தவர்களுக்கானதாகவே வளைத்து வைத்திருக்கும்.
இத நான் மட்டும் சொல்லலங்க. எல்லாம் ஊரறிஞ்ச ரகசியம்தான்..பாவம் அரசாங்கமும் என்ன செய்ய முடியும்?.. நாம யாரிடமாவது ஒரு ஆயிரம் ரூபா கடனோ, கைமாற்றோ  வாங்கிட்டோம்னா அவுங்ககிட்ட எப்டிங்க கெடுபிடியா நடப்போம். கொஞ்சம் அப்படி, இப்படித்தான நடப்போம். அப்படிதாங்க அரசாங்கமும். அவுங்களோட வரி பணத்துலதானே நிர்வாகமே நடக்குது. போதாக்குறைக்கு வெளிநாட்டுத் தொழிலதிபர்களிடமும் கடன் வாங்குகிறது.. "வெளிநாட்டு தொழிலதிபர்களா?"  யாரப்பா அவர்கள் என்று குழம்ப வேண்டாம். ஐ.நா சபையும், உலக வங்கியும்தான் அவை.. அதெப்படி? அவர்கள் உலக நன்மைக்காக அல்லவா இருக்கிறார்கள் என்கிறீர்களா? நன்மை செய்பவர்கள் ஏன் வட்டியில்லாக் கடனாக வழங்காமல்,  கடன் பெற்ற நாடுகளிடம் வட்டி வாங்கி, மேலும் பாதிப்படையச் செய்கிறார்கள்? மேலும் அவர்கள் தரும் பணமெல்லாம் யாருடையது? அப்பணத்தை கடனாகப் பெற்ற நாடுகள் கட்டும் வட்டியை யார் பெறுகிறார்கள்? ஏடாகூடமான கேள்விகளை கேட்டு விட்டேனோ?  விடை அறியாதவர்கள் இருந்தால் அறிந்து கொள்ள வசதியாக பதிலையும் தருகிறேன். நம் கண்ணுக்கு புலப்படாத,  பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலக மகா தொழிலதிபர்களின் பணம்தான் நமக்கு கடனாக உலக வங்கியின் வழியாக வருகிறது.. இக்கடனை வாங்கும் நாடுகள் அவர்களின் நலனையும் கருத்தில் கொண்டுதான்  சட்டங்களை உருவாக்கும்..அல்லது உருவாக்க வற்புறுத்தப்படும்.. இது போன்ற சமயங்களில் உள்ளூர் தொழிலதிபர்களை கூட அரசு கண்டு கொள்ளாமல் இருந்து விடும். அப்படியிருக்கும் போது பெருவாரியான, நடுத்தர மற்றும் சாதாரண மக்களை பற்றி யோசிக்க என்ன வேண்டி கிடக்குது?
நாம என்ன வரி கட்டாமலா இருக்கோம்னு கேக்றீங்களா?
ஹலோ சார்,  நாம கட்ற வரிலாம் அரசாங்கத்தோட மொத்தச் செலவுல ரொம்ப கம்மிதாங்க... சரி விடுங்க.. அரசாங்கம் யோசிக்கலனா நாமளும் நம்மள பத்தி யோசிக்காம இருக்க முடியுமான்னு கஷ்டப்படறவன்  யோசிக்கிறான்.
அவன் என்ன பண்றான்..? திருட்டு, கொள்ளை,விபச்சாரம், கடத்தல், கொலை என ஏதோ அவனுக்கு தெரிஞ்ச பொழப்ப பாத்து காலத்த ஓட்றான்..
சாப்பாட்டுக்கு வழி இல்லாதவன் தப்பு பண்றான் சரி..( அரசியல் மற்றும் சொத்து சார்ந்த கொலைகள், கடத்தல்கள் தனி)
இந்த தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், அரசாங்க வேலைல இருக்கறவன்,கை நிறைய சம்பளம் வாங்குறவன் இவங்களாம் கூட  தப்பு பண்றாங்களே, இவுங்க என்ன பண்றாங்கன்னு சொல்லணுமோ? ஊழல்,லஞ்சம், சுயநலம்,வரி ஏய்ப்பு, கலப்படம், பதுக்கல், நிதி நிறுவன மோசடிகள், தொழில் போட்டி, பொறாமை, போலிகள்னு மறுபடி ஒரு பெரிய பட்டியலே போடலாம்..போதாததற்கு  இப்போ புதுசா ஏதோ ஊகவணிகம்னு வேற பண்றாங்களாம். மொத்ததுல பெரும்பாலான சமூக விரோத காரியங்கள் நடக்க முக்கிய காரணம் பணம்தான்னு சொல்ல எந்த ஆராய்ச்சியும் தேவை இல்லை..இதெல்லாம் நீங்க இப்ப வர்ற படங்கள்ல நிறைய பாத்திருப்பீங்க. அதனால நான் பட்டியல் போடாம அடுத்த பாடத்திற்கு போறேன்..

பணம் இல்லையென்றால் எப்படி?

இங்கே சில கேள்விகள் மூலமாக நான் எனது கருத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்..
உண்மையிலேயே நம் வாழ்வு மகிழ்ச்சியானதாக, நாம் நினைப்பதை நினைத்த நேரத்தில் செய்ய முடிவதாகத்தான் அமைந்துள்ளதா?
நாம் நினைத்த ஒரு பொருளையோ, அல்லது ஒரு விசயத்தையோ உடனே பெற்று விட முடிகிறதா? அப்படியே பெறமுடிகிறது என்றாலும்
நாம் விரும்பும் தேவைகளுக்கு முடிவு என்பது, அதாவது நான் கடைசியாக ஆசைப்படுவது இதுதான் என்று யாரேனும் கூறிட இயலுமா?
நிறைய கேள்வி கேட்டு விட்டேனோ? கடைசியாக ஒரு கேள்வி.. இக்கேள்விகளுக்கு ஒரு கோடி பேரில் ஒருவரேனும் ஆம் என்று பதிலளிக்க முடியுமா? எப்போதும் நாம் செய்ய நினைக்கும் எல்லா செயல்களும், அல்லது விருப்பங்களும் ஏதாவது ஒன்றைச் சார்ந்தே இருக்கும்,, அப்படியென்றால் நாம் நினைத்தவாறெல்லாம் வாழ முடிவதில்லை என்பதுதானே பொருள்?
பெருவாரியான சராசரி மக்கள் இதனை ஆம் என ஏற்றுக்கொள்வார்கள். பணம் படைத்தவர்களும்கூட  ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.. ஏனெனில் செல்வந்தர்கள் உண்மையில் அவர்களுக்கான வாழ்வை அவர்கள் வாழ்வதில்லை..அவர்கள் வாழ்வது அவர்களது முன்னோர்களின் வாழ்வையும், அவர்களின் வாரிசுகளுக்கான வாழ்வையும்தான்.. அவர்கள் ஒரு வரையறுக்கப்பட்ட வட்டத்திற்குள், முறைப்படுத்தப்பட்ட பழக்கவழக்கங்களுக்குள் வாழ்கையை வாழ்பவர்கள்..இந்த உண்மையை அவர்கள் உணர மறுக்கிறார்கள். வேறு வழியின்றித் தன் முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களை பெருக்கவும், தனது வாரிசுகளுக்காக அடைகாக்கவும் வேண்டிய நிலையிலேயே பெரும்பான்மையான செல்வந்தர்கள் வாழ்ந்து கொண்டு இருகிறார்கள்.. நான் சொல்வது முற்றிலும் உண்மையென அவர்கள் மனதிற்கு தெரியும்.. தனக்கான வாழ்வை வாழ முடியாமல் போன ஒரு செல்வந்தனது  மன நிலையின் வெளிப்பாடு இக்கவிதையில்...


           "ஒன்றை இரண்டாக்கினார் தாத்தா, இரண்டை ஆறாக்கினார் அப்பா,
             ஆறை பதினாறாக்க இறக்கைகட்டிப் பறக்கிறேன் நான்,
             எனக்கான வாழ்க்கை சூன்யமாகிப் போவதை உணராமலேயே.."

தனக்கான வாழ்வைத் தேடி, தனது பெருஞ்செல்வத்தைத் துறந்து வெளியேறி புத்துயிர் பெற்ற ஒரு செல்வந்தர் "புத்தர்".. அவருக்கு முன்பும், பின்பும் ஏனையோர்..

அய்யா, இவ்வளவும் பணம் என்ற ஒன்று இருப்பதால்தான நடக்குதுன்னு சொல்றதெல்லாம் சரி..
பணம் இல்லாம பண்ணிட்டோம்னு கூட வச்சுக்குவோம். ஆனா பணம் இல்லாம எப்டிப்பா சமுதாய வண்டி ஓடும்?
ஆமால..அத நாம யோசிக்கனும்ல? வாங்க யோசிப்போம்..

எல்லா நாட்டிலும் அரசாங்கம், அரசில்யலமைப்பு என்ற கட்டமைப்பு இருக்கும்..அப்படி இருக்கும் நாட்டில் அரசிற்கு பல கடமைகளும், பொறுப்புகளும் இருக்கும். அதே போல அரசியல்வாதிகளுக்கும் இருக்கும் (சிரிக்கக் கூடாது). உதாரணத்திற்கு கல்வி, சுகாதாரம், குறைந்தபட்ச உணவிற்கான உத்திரவாதம் போன்ற பல தேவைகளை இலவசமாகவும் அல்லது சில சலுகைகளோடும் அரசு தந்து கொண்டுதான் இருக்கிறது.. இன்னும் சொல்லப்போனால் பள்ளிகள், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள்,சிறைச்சாலைகள், அரசு மருத்துவ மனைகள்,காவல்துறை,
இராணுவம், விஞ்ஞானம் என மேலும் இது போன்ற அனைத்தையும் 
அரசுதான் பொறுப்பேற்று நடத்துகிறது.. இங்கெல்லாம் பணம் என்ற ஊடகம் (medium) செயல்படுகிறதா? இல்லைதானே...


நாம் பேசுவது ஒட்டு மொத்த உலகிற்குமான பொதுவான கருத்துதான்..ஆனால் தற்போது நம் தாய்த் தமிழ்நாட்டில், கடந்த அரசும், நடக்கின்ற அரசும் எனது எண்ணத்தை ஏதோ ஒருவகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.. ஆம் எங்கெங்கு காணினும் இலவசங்கள். எல்லாமே இலவசமாக கிடைக்கிறது.. இப்போது அனைத்து தேவைகளும் பணம் என்ற medium இல்லாமலே கிடைக்கிறதே எப்படி? என்ன சிந்தனையில் பேசுகிறான் இவன்? அரசிற்கு வரி என்ற ஒன்று வருவது பணம் என்ற ஒன்று இருப்பதால்தான்.வரி என்ற ஒன்று வருவதை வைத்துதான் இப்படியான இலவசத் திட்டங்களை நிறைவேற்ற முடிகிறது. பணம் இல்லை என்றால் அரசிற்கு வரி எப்படி வரும்?. 
வரி இல்லையென்றால் அரசாங்கம் எப்படி இலவசங்களை தர முடியும்?
இலவசங்களை விட்டு தள்ளு..அரசாங்கமே வரி இல்லாம எப்படி நடக்கும்..? அரசாங்கம் இல்லாம நாடு என்ன ஆகும்? போற போக்க பாத்தா இவன் பேசுறது நாட்டையே உருப்படாம  ஆக்குற மாதிரில இருக்குனு தோணுதுல...

தோணனும்.. அப்படி தோணுனாதான் நீங்க சரியா என் கருத்தை பின் தொடர்றீங்கனு அர்த்தம்..

சரி ஒரு முடிவுக்கு வருவோம்..இப்ப பணமும் இல்ல, வரியும் இல்ல, நாட்டுல தப்பு தண்டா ஏதும் நடக்கல..அரசாங்கம் எப்படி நடக்கும்? எல்லாரோட தேவைகளும் எப்படி நிறைவேறும்? அரசாங்கம்ன்றது என்ன சாதாரணமா? கல்வி, சுகாதாரம், குறைந்தபட்ச உணவிற்கான உத்தரவாதம், பள்ளிகள்,
முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள்,சிறைச்சாலைகள், அரசு மருத்துவ மனைகள், காவல்துறை, இராணுவம், விஞ்ஞானம் போன்ற எத்தனையோ துறைகளை எப்படி நிர்வகிக்கும்?
எப்பா..நினைச்சாலே தலை சுத்துது.. வேண்டாம்டா சாமி..பணம் பாட்டுக்கு இருந்துட்டு போகுது  நீ போய் உன் வேலைய பாரு,
நான் போய் என் வேலைய பாக்குறேன் போய்ற வேண்டாம். கொஞ்சம் யோசிச்சா அதுக்கும் வழி கிடைக்காமலா போய்விடும்.?

எவ்வாறு தவிர்ப்பது..?

இன்றைக்கு அனைத்து நாடுகளும் "நிதிநிலை அறிக்கை"யில் (அதாங்க "பட்ஜெட்") ஒரு குறிப்பிட்ட பணத்தை நாட்டின் பாதுகாப்பிற்கு அதாவது இராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள், போர்க் கருவிகள், காவல் துறையை நவீனப்படுத்துதல் போன்றவற்றிற்கு ஒதுக்கி வருகின்றன.
பணம் என்ற ஒன்று இல்லாதபோது  நாடுகளுக்கு இடையே போர் அல்லது சண்டை வர வாய்ப்பு இல்லை என்கிற போது இது போன்ற செலவுகளுக்கும் தேவை இல்லாமல் போய்விடும். யாருக்கும் திருட வேண்டிய தேவையே இல்லாத போது காவல்காரனுக்கு என்ன வேலை? கதவே இல்லை என்றால் அங்கே பூட்டிற்கும், சாவிக்கும் என்ன தேவை? 

பெரும்பாலும் சமுதாயதத்தின் எல்லா துறைகளிலும், நிறுவனங்களிலும் உள்ள பணியிடங்களில் தற்போது இருக்கும் பலதரப்பட்ட ஏற்ற, இறக்க நிலை அவரவரின் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ப இருக்கிறது..அதற்கு தகுந்தாற்போல ஊதியமும் இருக்கிறது. ( பல இடங்களில் பதவியும், பதவி உயர்வும், பணத்தால்தானே கிடைக்கிறது..!!! போகட்டும் ,அதை பணத்தால் வரும் தீமைகள் பட்டியலில் சேர்த்து விடுவோம்.) ஆகவே தற்போதுள்ள பணியிடங்களில் உள்ள  நிலையை அப்படியே வைத்து கொள்வோம். அரசு சார்ந்த துறைகளில் இருக்கும் விசயங்களை  எனது கருத்தை விளக்க எடுத்துக் கொள்கிறேன்..

அரசாங்கப் பணிகளில் இருப்பவர்களுக்கு அரசே வீடும், வாகனமும், இன்னும் பிற வசதிகளையும் செய்து  தருவதை பார்க்கிறோம்.. ஆனால் ஒரே மாதிரியான வீடுகளோ, வசதிகளோ அவர்களுக்கு இருக்காது. அவரவர் பதவிக்கு ஏற்பதான் இருக்குமே தவிர அவரது சொத்து, பணம் போன்றவற்றின் அடிப்படையில் இருப்பதில்லை. அதை அப்படியே தொடர்ந்து எல்லா நிலைகளிலும் செயல்படுத்தினால் போதும்.. நாட்டில் எல்லோருமா அரசாங்கப் பணியில் இருக்கிறோம்? எப்படி எல்லா நிலைகளிலும் செயல்படுத்த முடியும்? என்ற கேள்வி எழுகிறதா? பணம் என்ற ஒன்று இல்லாத போது யாரும் தனியாக நிறுவனங்களை நடத்தப் போவதில்லை. அனைவருமே அனைவருக்குமான வேலைகளை செய்யும் போது அனைவரும் அரசு ஊழியர்களாகத்தான் கருதப்படுவார்கள். திறமை மட்டுமே தகுதியாக கருதப்படுவதால் அனைவருமே தங்களது துறையில் திறமைகளை வெளிப்படுத்தத் துவங்குவார்கள்.. சரி, அடுத்ததாக திறமைதான் தகுதியாக கொள்ளப்படும் என்றால் அது எப்படி?  பணம், செல்வாக்கு, சிபாரிசு போன்றவை நிராகரிக்கப்படும். எல்லா இடங்களிலும் திறமையின் வெளிப்பாடு மட்டுமே இருக்கும்..அவரவர் நிலைக்கு ஏற்ப தற்போது உள்ள அரசுத் துறைக்கான பல்வேறு வகை குடியிருப்புகள் போன்று அனைவருக்கும்  அரசாங்கத்தால் அனைத்து  வசதிகளும் உருவாக்கி தரப்படும் ...அனைத்து தரப்பினரும் தரமான வாழ்க்கை அமைப்பைப் பெற முடியும்.

எனக்கொரு சந்தேகம்?...
 
இப்போதெல்லாம் சம்பளப் பணத்தை முன்பு போல இரும்புப் பெட்டியில் வைத்தா செலவு செய்கிறோம்? அட ஆமா.. வீட்டுல இருந்த இரும்பு பெட்டிதான் இப்ப நாட்டின் முண்டு முடுக்கிலெல்லாம் வைக்கப் பட்டுள்ளதே.. ATM என்ற பெயரில்... ATM அட்டையைக் கொண்டே பெரும்பாலான மாதச் சம்பளக்காரர்கள் தங்கள் சம்பளப் பணத்தை தொடாமலே மாதச்செலவு முழுவதையும் செய்து விட முடியும்.. "சம்பளக் கவர்" என்பது இன்று எங்கோ ஒரு சில இடங்களில்தானே இருக்கிறது.. இதில் என்ன சந்தேகம் உனக்கு?
இந்த முறையில் பணம் என்பது கண்ணால் பார்க்கப் படவில்லை, கையால் தொடப்படவில்லை..எல்லா இடத்திலும் பணத்தின் "மதிப்பை" மட்டுமே பரிமாறிக் கொள்கிறோம்..இல்லையா? இது போன்ற முறை  நடைமுறையில் இருக்கும் போது, பணம் இல்லாமல் ஒரு அட்டையையும், சில "மதிப்புகளையும்" வைத்துக் கொண்டு நமது சமுதாயத்தை அமைக்க முடியாதா? உண்மையாகவே இது என்னுடைய சந்தேகமே..தெரிந்தவர்கள் கட்டாயம் விளக்கம் தரவும்..

பொருளாதார நிலையும், தனி மனித வாழ்க்கையும்...

நம்மில் ஒரு பகுதியினர் மாத சம்பளம் பெறுவோராகவும், இன்னொரு பகுதியினர் வாரச் சம்பளமோ அல்லது தினக்கூலியோ பெற்றுக்கொண்டிருக்கலாம். வேலையே இல்லாதவர்களும் இருக்கிறோம். ஆனால் எல்லோருக்கும் கவலை என்பது மட்டும் பொதுவானதாக  இருக்கிறது.. கவலை என்றால் எத்தனை? எண்ணவே முடியாது.. தினச்செலவு, வாரச்செலவு,மாதந்தோறும் மற்றும் வருடந்தோறும் செய்ய வேண்டிய செலவுகள், குழந்தைகளுக்கான வருங்கால சேமிப்பு, அவர்களின் கல்வி,  நமக்கான ஓய்வு கால சேமிப்பு, எதிர்பாராத செலவுகளுக்கான சேமிப்பு, இடம் வாங்க வேண்டும், அதில் வீடு கட்ட வேண்டும், அந்த கடனை செலுத்த வேண்டும் என பணம் பற்றிய எண்ணற்ற கவலைகளை சுமந்து கொண்டே வாழ்கிறோம். ஒவ்வொருவரும் ஒரு மனநோயாளிகளாக மாறிக்கொண்டு இருக்கிறோம். காலை எழும்போது விழிப்பது நாம் அல்ல, நம் கவலைகள்தான்.. இரவு உறங்குவதும் அதுதான்.  திரையரங்கு, பூங்கா, கோவில், சுற்றுலா என எங்கு போனாலும் வந்தாலும் உள்ளே ஒரு ஓரத்தில் எதைப்பற்றியாவது கவலை இல்லாமல் இருந்திருக்கிறோமா?   இக்கவலைகள் நம் மனதையும், உடலையும் பாதித்துக் கொண்டு இருப்பது நமக்கு புரியாமலில்லை. ஆனால் வேறு வழி? இருக்கும் வரை இப்படியே இருந்துட்டு போக வேண்டியதுதான் என்ற மனநிலையுடன் வாழப் பழகி விட்டோம்..ஆன்மீகவாதிகள் சொல்வது போல வாழ்க்கை இன்பமயமானதுதான்.மறுப்பதற்கில்லை. ஆனால்  உலகம் எங்கும் அமைதியும், சமாதானமும் நிரம்பி வழிகிறது என்ற ஒரு "மாயத் தோற்றத்தை"  அவர்கள் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்..உனக்கு கிடைத்த வாழ்வே மிகவும் மகிழ்ச்சியானது, உனக்கு என்ன கிடைக்க இருக்கிறதோ அதுதான் கிடைக்கும் என்று தொடர்ந்து கூறி மக்களை ஒரு ஆன்மீக "போதையில்" திளைத்திருக்கும்படி வைத்து விட்டார்கள்..சொல்லப் போனால் உண்மையான மகிழ்ச்சியை நாம் இன்னும் உணரவே இல்லை.. நாம் நமக்கான தேவைகளை உருவாக்குவதிலும், வாழ்கையை எப்படி சந்தோசமாக அனுபவிப்பது என்ற உண்மையை தேடித் தேடியுமே நமது வாழ்வை முடித்துக் கொள்கிறோம். இவர்கள் கூறுவதைப் போல உலகம் உண்மையிலேயே ஆனந்தமான ஒரு நிலையை எட்டியிருந்தால் ஆன்மீகவாதிகளின் "பயிற்சி வகுப்புகளும்" "வாழும் கலைகளும்" காணாமல் போயிருக்கும். இங்கே எவரும் கடவுளையோ, கோவிலையோ தேட மாட்டார்கள் என்பதே உண்மை..

மேலும் தற்போதைய எந்திரத்தனமான வாழ்க்கை முறை  நம்மை அமைதியற்ற ஒரு நிலையிலும், சமயத்தில் "மனமுறிவு" ஏற்படவும் வைக்கிறது.  நிறுவனங்கள் மனிதர்களை ஒரு உற்பத்திக் காரணிகளாகவே பார்க்கின்றன..தனது உற்பத்தியை நிறுத்தினால் வெளியேற்றப்படுவோம் என்ற நிலையில் மனிதன் முழு எந்திர நிலையை அடைந்துவிடுகிறான். தன் மீதான நம்பிக்கை இல்லாமல் தன் தொழிலை நம்பிய நிலையில் வாழ்ந்து வருகிறான். இந்த ஈடு செய்ய முடியாத இழப்பை மனித இனம் இன்னும் முழுமையாக உணரவில்லை..சில சமயங்களில் நேரான வழியில் தனது  தேவையை பெற முடியாத நிலையில், மனிதன் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கிறான். இயற்கைக்கு முரணான போக்குகள் வளர்கின்றன.
பல இனம்புரியாத  மன நோய்கள் தோன்றுவதற்கும் நாமே வழிவகுத்து கொள்கிறோம் என்பது மேலோர் பலரின் கருத்து.. 

 
பணமற்ற சமுதாயம் எப்படி இருக்கும்?

 
நமது பணமற்ற சமுதாயத்தில் எவ்விதமான கவலைகளும் கொள்ளாமல், இன்று என்ன செய்து கொண்டு இருக்கிறோமோ அதையே மகிழ்வான மனதுடனும், ஆரோக்யமான உடலுடனும் செய்து கொண்டிருப்போம்.             எந்த ஒரு பொருளாதாரம் சார்ந்த விஷயத்திற்காகவும் கவலை கொள்ளாமல் மொத்த சமூகமும் தரமான, திறமையான, ஆரோக்யமான மனநிலையை உடைய மக்களைக் கொண்டதாக இருக்கும். ஒரு நிமிடம் அந்த வாழ்வை மனக்கண்ணில் கொண்டு வாருங்கள். அழுத்தம் இல்லாத, அவசரம் இல்லாத ஒரு நிலையில் நாம் செய்யும் செயல்கள்  அல்லது பணிகள் எவ்வளவு சிறப்பாக அமையும் என்பது நமக்கு தெரியவே இல்லை.. ஏனெனில் இதுவரை நாம் அதை ஒருமுறை கூட அனுபவிக்கவே இல்லை..ஆஹா.. அது எவ்வளவு உன்னதமான உணர்வு!!!  உணர்ந்தவர்களால் மட்டுமே அதை உணர முடியும்...ஊரெங்கும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் போது நம் மனநிலை எவ்வாறு குதூகளிக்குமோ, உறவினர்களின் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தினத்தன்று விருப்பம் போல் சாப்பிட்டு, ஆற அமர அமர்ந்து பேசிச்சிரித்து இருக்கும் போது நம் மனம் எவ்வாறு மகிழ்வைப் பெறுமோ அதைப் போன்றே எப்போதும் நம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள முடியும்.

தொழிலும், தொழிலைத் தொடர்ந்து மக்களும், மக்களைத் தொடர்ந்து தொழிலும் என இடைவிடாது  நாட்டின் தலைநகரங்களை மட்டுமே நோக்கிச் சென்று குவியும்  "யானைக்கால் வளர்ச்சி"  தவிர்க்கப்பட்டு  நாடு முழுவதுமான வளர்ச்சி சாத்தியமாகும்..மனிதன் தன் எந்திரத்தனமான செயல் மற்றும் சிந்தனையிலிருந்து வெளியேறுவான்..அவன் "தன்னைச் சார்ந்து நிற்றல், தன்னம்பிக்கை, துணிச்சல், மனச் சமநிலை, சுதந்திரமான சிந்தனை, சுயமதிப்பு, பொறுப்புணர்ச்சி, நம்பிக்கை" ஆகிய மனித குணங்களைப் பெறுவான். செல்வம் என்பதே இல்லாமல் போய், அதிகாரம் பரவலாக்கப்படும்..கடவுள் குடி கொண்டிருப்பதாக கருதப்படும் கோவிலும், மடங்களும் கோடானு கோடி மதிப்புள்ள சொத்துகளை சேர்ப்பதும், ஆக்கமான வகையில் இல்லாது பயனில்லாத வகையில் செலவுகளை செய்வதும் தவிர்க்கப்படும். வறுமையாலும், தேவைகள்  நிறைவு பெறாமல் போனதாலும் வேறு வழியின்றி ஆயுதமேந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட நக்சல்களும்,மாவோயிஸ்டுகளும் இருக்க மாட்டார்கள்..
நம் இராணுவ, காவல்துறை நண்பர்கள்  "தேசப்பற்று" என்ற மோசடியால் தங்களின் வாழ்கையை அனாவசியமாக இழக்க வேண்டியதும் இருக்காது..
பணம் என்ற ஒன்றை சேர்த்து வைத்ததால் மட்டுமே காலங்காலமாக உழைக்காமல் உண்டு கொழுப்பவர்கள் இருக்க மாட்டார்கள்..
தலைமுறை தலைமுறையாக கடினமாக உழைத்தும் அடிப்படை தேவையை கூட பெற முடியாமல் விலங்கிலும் கீழான நிலையில், ஒரு வேலை உணவிற்கும்  வழியற்ற நிலையில் இருக்கும் மக்களும் இருக்க மாட்டார்கள்.. திருமணங்கள் பணம், சொத்து, செல்வாக்கு போன்றவற்றால்  நிச்சயிக்கப்படாது.. உண்மையான புரிதல்கள் மட்டுமே திருமணத்தை நிச்சயிக்கும்.. "குவிதல்"முறைப் பொருளாதாரம் காணாமல் போய்விடும்.. மனிதர்கள் இன்பமான நிலையிலே வாழ்வை ரசித்தவாறு இருப்பார்கள்..இந்த உலகம் முழுவதும் பரபரப்பின்றி, சலசலப்பின்றி, நிதானமாக சீரான வளர்ச்சியை நோக்கிச் செல்லும்..இது போன்ற நிலையை இந்த பூமி அடைய வேண்டும் என்பதுதானே எல்லா மதத்தலைவர்களும், உலகத் தலைவர்களும் மட்டுமின்றி சராசரி மனிதர்களும் கடவுளை வேண்டுவதும்,விரும்புவதும்..

என் முடிவை மாற்றிக் கொள்கிறேன். ஆனால்?
பணம் இருந்துதான் ஆக வேண்டும்.. நாம் கூறுவதெல்லாம் நடைமுறைக்கு சரிப்படாது என நினைப்பீர்களேயானால் அமைதியான சமுதாயம் அமைய  மற்றொரு தீர்வும் இருக்கிறது .. உலகின் எல்லா பணக்காரர்களும், அல்லது அரசாங்கங்களும் சேர்ந்து இதைக் கட்டாயமாய் நிறைவேற்றிவிட முடியும்..ஆம் சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது ஓடோடி வரும் சர்வதேச நாடுகள், வறுமையை ஒழிக்க காலம் காலமாக திட்டம் தீட்டுபவர்கள் நிச்சயமாய் இதனை செய்துவிட முடியும்.   வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், ஒரு வேலை உணவிற்கும் வழியற்றவர்கள் என புள்ளியியல்துறைதான் துல்லியமாக கணக்கெடுத்து வைத்திருக்கிறதே.. அவ்விவரங்களை வைத்து நாம் இதை இன்னும் எளிதாக நிறைவேற்ற முடியும். வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு ஒரே ஒருமுறை  தலா 10 இலட்சமோ, 20 இலட்சமோ அக்குடும்ப நபர்களின் பெயரிலேயே ஏதேனும் ஒரு அரசு வங்கியில்,( கொடுத்துவிட்டு அரசு வங்கிகள் மூலமாக மீண்டும் வாங்கிகொள்ளலாம் சரியா?) மாதந்தோறும் வட்டி மட்டுமே பெறக் கூடிய வகையில் அரசாங்கமே செலுத்திவிட்டால் போதும்.. பாவம் ஏழை மக்கள் அந்த வட்டியை வைத்து அவர்களின் வாழ்வை மகிழ்வானதாக மாற்றிக் கொள்ளட்டும்.. இதைச் செய்வார்களா ? செய்தால் என்ன ஆகும்? அரசோ, வங்கியோ எப்படி வட்டி கொடுக்க முடியும்? வங்கியில் உறங்கும் பணம் எப்படிப் பெருகும்? காலங்காலமாய் அந்த வட்டிக்கு உழைப்பவர்கள்தான் வட்டியினால் வருமானம் பெற்று  சுகமாக வாழ்ந்து கொண்டு இருப்பார்களே..!!! மூளைக்குள் ஏதேனும் பொறி தோன்றுகிறதா?  நாம் உணராத, ஆனால் உணர வேண்டிய உண்மை இதுதான்.. எங்கோ யாருடைய செல்வத்திற்கோ வட்டி கட்டவும், அவர்களின் பணத்தை பெருக்கவும்தான்  நாம் காலங்காலமாய், கட்டாயமாய், ஓயாமல் உழைக்க வைக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.  இதனை நாம் சிந்திக்காவிடில் நமது சந்ததியினரும் அவ்வாறே இருக்க வேண்டிய நிலைதான் தொடரும்...


நாம் என்ன செய்ய வேண்டும்?

        "மனித வாழ்வின் மிகபெரிய வெற்றி என்னவென்றால் அவனவன்       மனத்திருப்தியோடு வாழ்வதுதான்". பெரியார்..

பொருளாதார மேதைகளின் கூற்றுப்படி சமுதாயம் என்பது தனிமனிதர்களின் தொகுப்பே.. அதன்படி எல்லா தனிமனிதர்களும் ஒரு நிறைவான வாழ்வை பெரும் நாள்தான் சமுதாயம் தன்னிறைவு பெற்ற நாளாக இருக்க முடியும்... ஆனால் பணம் என்பது இருக்கும் வரை அந்நிலை வர சாத்தியமே இல்லை..இன்னும் எத்தனை ஆண்டுகள் பாடுபட்டாலும், மாபெரும் திட்டங்கள் தீட்டினாலும் அப்படியொரு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதற்கான நம்பிக்கை தோன்றவில்லை. ..ஊழல், லஞ்சம், கறுப்புப் பணம் என எதை தடுத்தாலும் சாதாரண மனிதர்களின் வாழ்வில் பெரும்மாற்றம் வந்து விடப் போவதில்லை.ஏனெனில் இலாப நோக்கால் நடைபெறும் பொருளாதார நடவடிக்கைகளில் "மனித நலம்" புறக்கணிக்கப்படுகிறது. சிலருக்காக பலர் பாடுபடுகின்ற நிலையே இருக்கிறது.

இந்த உலகில் இருப்பது எத்தனை பேர்? புள்ளிவிபரப் புலிகளை கேட்டால் உடனே கூறுவார்கள் இத்தனை கோடி பேர் என்று. ஆனால் உண்மையில் இந்த உலகில் இருப்பது "உடையவர்கள்" "இல்லாதவர்கள்"  என்ற இரண்டே நபர்கள்தான். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் நாம் அனைவருமே இந்த இரண்டு தகுதிகளையும் பெற்றிருக்கிறோம்.. ஆம்.. ஒருவனிடம் இல்லாத ஒன்று என்னிடம் இருந்தால் நான் "உடையவர்கள்" பிரிவில் இருப்பேன்.. இன்னொருவனிடம் இருக்கும் ஒன்று என்னிடம் இல்லாத போது நானே "இல்லாதவர்கள்" பிரிவிலும்  இருப்பேன்..இப்படித்தான் உலகம் முழுவதும் இரண்டே இரண்டு நபர்களால் நிறைந்துள்ளது..  இவை எல்லாம் நமது  (முதலாளித்துவ) பொருளாதார அமைப்பால் விளைந்தவை என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

எல்லோரும் எல்லோருக்காகவும் வாழ்வதே "பொதுவுடைமை" என்றாகிறது.. ஆனால் இதிலும் சில பிரச்சினைகள் உண்டு.. பொதுவாக "பொதுவுடமையின்"  இலட்சியங்கள் உயர்ந்தவை..ஆனால் அதை அமைக்க பின்பற்றபட்ட முறைகள் வன்முறையாகவே படுகிறது.. இது பலரின் நன்மைக்காக சிலரை அழிக்கவும் தயங்காத போக்கு கொண்டது.. "மனிதர்களின் மனப்போக்கை" மாற்ற முயலாமல் புறச்சமுதாய மாற்றங்களுக்கு முக்கியத்துவம் தருகிறது. எந்த மனிதர்களுக்காக அமைக்கப்படுகிறதோ அம்மனிதர்களின் நலனையே சிறிது புறக்கணித்தும் விடுகிறது..

ஆகவேதான் இவை இரண்டும் மனிதகுலத்தின் அமைதியான வாழ்விற்கும், அறம் சார்ந்த முன்னேற்றத்திற்கும் ஏற்றதாக அமையவில்லை. இதெல்லாம் முன்பே கூறப்பட்டு வந்த கருத்துகள்தான்.. நமது "தேசத் தந்தை" காந்தியடிகள் வலியுறுத்திய "பரவல் முறை பொருளாதாரம்" மிக மிக பொருத்தமானதுதான். சரி அது நமக்கு கை கொடுக்குமா? என்றால் அதை ஏற்கனவே உலகில் எந்த மூலையிலும் இல்லாதவாறு கவனமாக அழித்தொழித்து, காணாமல் போக்கடித்துவிட்டோம்.. இப்போது நாம் நினைப்பதை செயல்படுத்த வேண்டுமென்றால் "வரலாற்றை திருப்பிப்  போடக் கூடாது, புதிய வரலாற்றைப் படைக்க வேண்டும்". ஆகவே "நமது கடமையை" நாம் ஆற்றுவோம்..நமது தேவைகள் அனைத்தையும் நமக்கு பொருத்தமான அரசைக் கொண்டு பெறுவோம்..சம்பளமாக பணம் என்பது வேண்டாம்.. நம்முடைய தேவைகளையெல்லாம்  கிடைக்கும் நிலையில் பணம் என்பது எதற்கு?  ஒவ்வொருவரும் பணம் என்பதை சம்பளமாக பெற சம்மதிக்கவில்லை என்றால் எல்லாமும் மாறி விடும்.. இன்று வீணாய் எங்கோ தூங்கிக் கொண்டிருக்கும் "கறுப்புப்பணம்" எல்லாம் அப்படியே குப்பைக்கு போய்விடும்.. நிச்சயமாய் எல்லாமும் சில காலங்களில் மாறிவிடும். ராட்சசத் தனமான தொழில்கள் மட்டுப்படுத்தப்படும். அவற்றின் கணக்கற்ற உற்பத்திகள் நிறுத்தப்படும். பணம் இல்லாத சமுதாயத்தில் செல்வமும்,அதிகாரமும் ஒரே இடத்தில் "குவிவது"  தவிர்க்கப்படும்.தேவையற்ற பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிடும். நாம் விரும்பும் அந்த சமுதாயத்தை வெகு விரைவில் அமைக்க முடியும். ஏனெனில் இவ்வுலகில் இயற்கை விதித்த சட்டங்களை விட, மனிதன் தனக்குத்தானே வகுத்துக் கொண்ட சட்டங்கள்தான் அதிகம். அனைத்துமே  ஏதோ ஒரு காலகட்டத்தில், காலச்சூழ்நிலைக்கு ஏற்ப உருவான மாற்றங்கள்தானே. நாமாக விதித்துக் கொண்ட விதிகள்தானே.. ஒரு காலத்தில் கற்களை ஆயுதமாகக் கொண்டு, பின் அதை விட்டு கத்தியையும், தற்போது அதை தூக்கி எறிந்துவிட்டு துப்பாக்கியையும் எடுத்திருப்பது ஏன்? நமக்கு பொருத்தமில்லாதவைகளை நாம் தூக்கி எறிந்து விடும்போது, பொருத்தமில்லாத ஆனால் துன்பத்தை உண்டு பண்ணக் கூடிய பணத்தை ஏன் விட்டொழிக்க முடியாது? நம் காலத்தில் இது  நிகழாவிட்டாலும்  இன்னும் சில தலைமுறைகளில்  பணம் என்பது இல்லாநிலை வந்தே தீரும்.     

மனப்போக்கை மாற்றி கொள்ளத் தயாராவோம்:

பணம் இல்லாத சமுதாயத்தை ஏதேனும் திடீர் "புரட்சி" மூலம் உருவாக்கிட முடியாது.. அப்படி செய்தாலும் அது நீண்ட நாளைக்கு நீடிக்காது. ஏனெனில் புரட்சி என்பது ஒரு பிரச்சினையை சரி செய்வதுடன் அடுத்ததாக நாம் செல்ல வேண்டியதொரு சிறப்பான பாதையையும் காட்டுவதாக இருக்க வேண்டும். நமது சிந்தனையும், தீர்வும் என்றென்றைக்குமான உலகிற்கு வழி காட்ட வேண்டும். நமது எண்ணம் மிக மிகத் தூய்மையானது.. தன்னலமற்றது.. உலகின் ஒவ்வொரு உயிரும் துன்பம் நீங்கி, ஆனந்தமாய் வாழ வேண்டுமென்ற உயர்ந்த லட்சியம் உடையது.. எனில் அதை அடைவதற்கான வழியும் தூய்மையானதாய்  இருக்க வேண்டும்.. அதற்கு "மன மாற்ற வழிமுறை" என்பதே நிரந்தரத் தீர்வு தரும்.
"எனது", "எனக்கு சொந்தமானது" என்ற மனநிலையை தவிர்த்து வாழவே எல்லா மதத்தினாலும் நமக்கு அறிவுறுத்தப்பட்டு வந்துள்ளது.
மனிதனைப் பிடித்து வாட்டும் மூட நம்பிக்கைகளில் பணக்காரத்தன்மையும் ஒரு "மூடநம்பிக்கையே" ஆகும் என கடவுளை மறுத்த
தந்தை பெரியாரும் கூறியிருக்கிறார். பூமியில் வெறும் இரண்டு மனிதர்களே இருந்தாலும் "என்னுடையது", "எனக்கு சொந்தமானது"  என்ற மனநிலை இருக்கும்வரை சண்டைகளும், சச்சரவுகளும் ஓயப்போவதுமில்லை. சொல், செயல், சிந்தனை, வாழ்க்கை முறை எல்லாவற்றிலும் தன் மதம் கூறியதை வழிதொடராமல் பிறப்பால் மட்டுமே தன்னை ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவனாக காட்டிக் கொள்ளும் வெற்று மனிதர்களாக இருப்பதை அவமானமென உணர்வோம்..

பொதுவாக சமூகத்தில் தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்கின்ற உணர்ச்சி எல்லா மனிதருக்கும் இருப்பது இயல்பே. அப்புகழுக்கும், தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்ற தன்மைக்கும் "பணம் சேர்ப்பது" என்பதை சாதனமாகக் கொண்டதானது  மூடநம்பிக்கையில் பட்டதேயாகும்.. மனிதனுக்கு சுய நலமும், புகழ் ஆசையும் இல்லாமல் இருக்காது என்பது உண்மைதான், ஆனால் அதற்கு சாதனம் "செல்வம் சேர்ப்பது" என்பது இயற்கையில் ஏற்பட்டதல்ல.. பணம் என்பதே சேர்க்காமல் அதேசமயம்  புகழுடன், சமுதாயத்தில் பெரும் மதிப்புடனும் வாழ்ந்த மனிதர்கள் ஏராளம்.(கர்ம வீரர் காமராஜர், காந்தியடிகள், விவேகானந்தர் அதில் சிலர்) தங்கமும், வைரமும், சுக போகமும், ஆடம்பர வாழ்க்கையும்தான் ஒருவரின் கௌரவம் அல்லது அடிப்படை தேவை என்று நிர்ணயித்துக்கொண்டு வாழ்வை வாழாமல் பரபரத்து ஓடிகொண்டிருக்கும் நாம் நமது எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது மட்டுமே நமக்குள்ள மிகப்பெரிய சவால்..தங்கமும் ஒரு உலோகம்தான், வைரமும் ஒரு கல்தான்.. மண்ணுக்குள் இருக்கும் வரை அவை சாதாரண கனிமங்கள் மட்டுமே. அவற்றின் மீது போலியான மதிப்பை ஏற்றி நம்மை நாமே ஏமாற்றிகொண்டிருக்கும் அவல நிலையை மாற்ற விழைவோம். ஒரு காலத்தில் தாமிரமும், அலுமினியமும்கூட தங்கத்தைப் போல பெருமதிப்புடன் இருந்ததுதான். ஆனால் இன்றோ???

நாம் இவ்வாறு சிந்திப்பது நடை முறைக்கு  சிறிதும் உதவாது என்றோ, நடை முறையில் இதன் பிரதிபலிப்பு இல்லையென்றோ எளிதில் யாரும் மறுக்க முடியாது என நம்புவதால்தான் இதனை இங்கு வெளிப்படுத்த விரும்புகிறேன்..

வரவிருப்பவர்களை நேசிப்போம்..

       " தனக்கு என்னென்ன வசதிகள், நன்மைகள், பெருமைகள்   தேவையென்று கருதப்படுகிறதோ அவற்றை
    சமுதாயத்தில் உள்ள அனைவரும் அடையச் செய்யும் வழியில் நடப்பதே உண்மையான "நாகரிகம்" என்பதாகும்"..


பதவியும், வயிறு வளர்ப்புமே மனித வாழ்வின் லட்சியமல்ல.. மலத்தில் இருக்கும் புழுவும் தினத்திற்கு தினம் வளர்ச்சி அடைகிறது... மற்ற ஜீவன்களுக்கு ஏற்படும் இயற்கைக்கு ஆளாகி இயற்கை எய்துகிறது. மனிதனும் அதுபோலத்தானா? வாழ்வதும், வளர்வதும் தானா மனித இலட்சியம்? அல்லது அதுதானா மனிதர்களின் இயற்கை முடிவு? மனிதத் தன்மையும், மான உணர்ச்சியும் பற்றி சிந்தித்துப் பாருங்கள்..நாம் இன்று வாழும் வாழ்வே ஆனந்தமானது என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அல்லது அவ்வாறு நம்ப வைக்கப்பட்டு இருக்கிறோம், இது போல ஒரு 100  ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் அன்றைய வாழ்வை ஆனந்தமானதென நம்பியிருக்கலாம்.. அதற்கு முன்பு வாழ்ந்தவர்களும் அவ்வாறே நம்பியிருந்திருக்கலாம். ஆனால் பின்வரும் கதைதான் நமது மனநிலை..

ஒரு ஊரில் ஒரு மனிதன் அளவான குடும்பத்தோடு ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருந்தானாம். அவன் வாழும் பகுதிக்கு வந்த ஒரு துறவியின்  வருகை மூலம் வந்தது அவனின் போதாத காலம். அவரிடம் ஆசி பெறச் சென்றபோது அவர் மௌன நிலையில் தியானத்தில் இருந்திருக்கிறார். இவனோ பொறுமை இன்றி அவரது காலைத் தொட்டு ஆசி பெற முயன்றான். துறவிக்கு வந்தது கோபம், அவனுக்கு கிடைத்தது சாபம்..பன்றியாய் போகக் கடவது என. கடமை இருக்கிறதென அழுது புரண்டதில் அவனுக்கு கிடைத்தது ஆறுமாத அவகாசம் மனிதனாய் வாழ. நடந்ததை ஓடிச்சென்று கூறினான் மகனிடம். தன்னால் பன்றியாய் வாழப் போவதைக் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாதெனவும், அவ்வாறு மாறியதும் தன்னை வெட்டிக்  கொன்றுவிடவும்  கூறினான். நன்மகனும் ஒப்புக்கொண்டான்..ஆறு மாதம் கழிந்தது, மகன் தன் கடமையைச்  செய்ய விரைந்தான். எங்கும் தேடியும் தந்தையை காணவில்லை. அன்று முதல் எங்கெல்லாம் பன்றிகளைக் கண்டாலும் "அப்பா" என்றழைத்து பார்ப்பான். பலன்தான் இல்லை. ஒரு நாள் அதே போல் ஒரு பன்றிக் கூட்டத்தை கண்டான். அப்பா என்றழைத்தான். முதலில் கூட்டத்திலிருந்து ஒரு பன்றி மட்டும் அவனை நோக்கி வந்தது. அதைத் தொடர்ந்து இன்னும் சிலவும் வந்தன.கண்டதும் கண்டு கொண்டான் அது தன் தந்தையென்று. வெட்ட வாளை ஓங்கினான். பன்றி பேசியதை கேட்டு அப்படியே நின்றான்.
"மகனே, அவசரப்பட்டு என்னைக் கொன்று விடாதே, இங்கு எனக்கென ஒரு குடும்பமும், குழந்தை(குட்டி)களும் இருக்கிறது"
புரியாமல் விழித்தவனை நோக்கி மேலும் கூறியது.
"மனிதனாய் வாழ்ந்த பொது கொடுமையாய், கேவலமாய்த் தோன்றிய வாழ்வு பழகிப்போனதனால் இப்போது சுகமாகத் தெரிகிறது" என்று..
இப்படித்தான் நாமும் நம் வாழ்வை சுகமானதென்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். எப்போதும் நாம் நம் சிரமங்களை காலப்போக்கில் ஏற்றுக் கொண்டு வாழ பழகிக் கொள்கிறோம் என்பதே உண்மை. அது போன்ற மனநிலையுடன் இருப்பது தவறல்ல.. ஆனால் உண்மையில் மகிழ்ச்சியான வாழ்வென ஒன்றுள்ளதை அறிய நாம் முயலாமல் இருப்பதுதான் தவறு.

மற்றொரு விதத்தில் சிந்திப்போமானால் ஒருவேளை நாம் மிகுந்த திறமையுடன் வாழ்ந்து, பொருள் சேர்த்து விடலாம் அல்லது ஏழ்மையான வாழ்வை மனதளவில் ஏற்று மகிழ்வுடன் வாழ்ந்து விடலாம். ஆனால் நமக்கு பிறகு வரும் வாரிசுகளும் நம்மை போலவே இருப்பார்கள் என்பது என்ன நிச்சயம்? நாம் கஷ்டப்பட்டு சேர்த்து வைக்கும் செல்வம் ஒரே ஒரு இயற்கை சீற்றத்தில் சின்னாபின்னமாகி போகக்கூடும்..அல்லது ஊதாரி வாரிசுகளால் அழிக்கப்பட்டு விடலாம். உதாரணங்கள் ஏராளம்..செல்வத்தையும், இயற்கைச் சீரழிவையும் அவர்களுக்கு சீதனமாக்கித் தந்து பயன் என்ன?  நம்மில் திறமையானவர்கள், மனதால் பக்குவப்பட்ட மனிதர்கள் சமுதாயத்தில் ஏதோ ஒரு விதத்தில் வாழ தகுதியை பெற்று விடுகிறோம். ஆனால் சமுதாயத்தில் இருக்கும் மக்களில் பெரும்பான்மை மக்கள் பற்றி நாம் யோசிப்பதே இல்லை.. கல்வியறிவு இல்லாத, செல்வமும் இல்லாத மக்கள் என்ன ஆவார்கள்?         இழு வண்டி, மாட்டு வண்டி, கீரை விற்பவர், செருப்பு தைப்பவர், குப்பை அள்ளுபவர்கள், கூடை வியாபாரி என எண்ணற்ற, முழு வயிற்று உணவுக்கான வருமானம் கூட தராத தொழிலை செய்து வாழ்பவர்களும், அவர்களின் வாரிசுகளும் என்ன ஆவார்கள்? அவர்களின் எண்ணிக்கை உயர்வது பணம் படைத்தவர்களுக்கு என்றேனும் ஒருநாள் பேராபத்தாகவே முடியும்..அதுதான் வரலாறு..ஆதலால் நாம் எதிர்வரும் காலத்தை கருத்தில் கொண்டு,  இனி வரும் எந்த மனித இனமும் மகிழ்ச்சியை மட்டுமே பெற வேண்டும் என்பதற்கான ஒரு "நிலையான வாழ்க்கை" முறையை உருவாக்கிட வேண்டும். ....

உலகின் எல்லா மதங்களும், ஆன்மீகவாதிகளும் காலங்காலமாக கூறியும் கூட தன் சக மனிதர்களின் துயர நிலையை மாற்ற எதுவும் செய்யாமல்,
ஆனால் தன்னை அம்மதத்தை சேர்ந்தவனாக  வெளிக்காட்டிகொள்பவர்கள் இனியேனும் தங்களை உண்மையான மனிதர்களாக மாற்றிக்கொண்டால் அனைத்துலகும் இன்பமுற வாழ துணை நின்றவர்கள் ஆவார்கள்.. இங்கிருக்கும் எதுவும் நிலையானதாக இருந்து கொண்டிருக்கவில்லை. இனியும் அவ்வாறு  இருக்கப் போவதில்லை.. இப்போது வாழும் வாழ்க்கை முறைதான் நிலையானதென நினைக்காமல், மனிதன் என்பவன் மிக உயர்ந்த, மேன்மையான நிலையை அடையத் தகுந்த ஒரு வாழ்க்கை முறையை உருவாக்க முடியும். இவ்வுலகம் நமதல்ல... நாம் வந்து செல்லும் ஒரு விடுதி மட்டுமே. எல்லாவற்றையும் சந்தோசமாக அனுபவிப்போம். நமக்கு முன்பிருந்த தலைமுறையினர் தந்து சென்ற உலகை நமக்கடுத்து வரும் தலைமுறையினருக்கு இன்னும் அழகானதாக இன்னும் ஆரோக்கியமானதாக, அவர்களுக்கான வாழ்வை இன்னும் மகிழ்ச்சியானதாக மாற்றித் தர முயற்சிப்போம்.

No comments: